தாய்லாந்தில் இருந்து 72 பாம்பு குட்டிகளை பெங்களூருவுக்கு கடத்தி வந்த இளம்பெண்!
தாய்லாந்திலிருந்து பெங்களூருவுக்கு வந்த இளம் பெண்ணின் பையில் இருந்து 72 பாம்பு குட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொதுவாக விமான நிலையங்களில் பயணிகளின் உடைமைகள், பைகள் ஆகியவை சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து பெங்களூருக்கு வந்த இளம் பெண்ணின் பைகளை சோதனை செய்த அதிகாரிகள் அதில் ஏராளமான பாம்பு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சோதனை நடந்துக்கொண்டிருக்கும்போது அந்த பெண் தப்பியோடியதால் இவை எதற்காக கடத்திவரப்பட்டது என்று முழு விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் அந்த பெண்ணின் பையை முழுமையாக சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதிலிருந்து 72 பாம்பு குட்டிகள், 3 சிலந்தி குரங்குகள் மற்றும் 3 கபுச்சின் குரங்குகளை கைப்பற்றினர். பையில் வைத்து கடத்தி கொண்டுவரப்பட்டதால் சிலந்தி குரங்குகளும், கபுச்சின் குரங்குளும் உயிரிழந்த நிலையில் பாம்பு குட்டிகளை மீட்ட போலீசார் அவற்றை மீண்டும் பேங்காக்கிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய இளம் பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் அவர் இதுவரை நான்குமுறை சென்னை விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் தற்போதுதான் முதல் முறையாக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அவரின் பையில் இருந்து வனவிலங்குகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவர் வனவிலங்கு கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் விலங்குகள் கடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் கூட பயணி ஒருவர் வனவிலங்குகள் மற்றும் ஊர்வன ஆகிவற்றை தன் பெட்டியில் மறைத்து கடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக கங்காறு குட்டி ஒன்றை சூட்கேசில் வைத்து கடத்தி வந்தார். ஆனால் மூச்சு விட முடியாமல் அந்த கங்காறு குட்டி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இதுமட்டுமன்றி 4 நாகப் பாம்புகள், மலைப்பாம்புகள், உடும்பு, பல்லி, ஆமைகள், சிறு முதலைகள் ஆகியவையும் அவரது பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.