அடித்து நொறுக்கப்பட்ட வீட்டை மீள அமைக்க அனுமதி! – களமிறங்கினார் ஜீவன் (படங்கள்)
இரத்தினபுரி, கஹவத்த – வெள்ளந்துர தோட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதே இடத்தில் வீட்டை அமைப்பதற்கான அனுமதியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.
அத்துடன், அடாவடிதனமாக நடத்துகொண்ட, தோட்ட நிர்வாகத்தால் அனுப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இரத்தினபுரி, கஹவத்த – வெள்ளந்துர தோட்டத்தில் தமிழ்க் குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டை கஹவத்தை பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் வெள்ளந்துர தோட்ட நிர்வாகம், காடையர்களைக் கொண்டு அடித்து நொறுக்கியுள்ளது.
இது தொடர்பில் தோட்ட மக்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாளிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் உடனடியாகக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான், கஹவத்தையில் அமைந்துள்ள குறித்த தோட்டத்துக்கு இன்று மாலை நேரடியாக விஜயம் செய்தார்.
தோட்ட அதிகாரியின் பங்களாவுக்குச் செல்லும் பாதையை மறித்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போதிலும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்டத்துக்கு வருவதைத் தெரிந்துகொண்ட குறித்த தோட்டத்தின் முகாமையாளர் தலைமறைவாகினார்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளந்துர தோட்டத்துக்கு வருகை தந்த அமைச்சருடன் மக்கள் தமக்கு நிகழ்ந்த அநியாயங்கள் குறித்து எடுத்துரைத்ததுடன், இந்த விடயம் தொடர்பில் காஹவத்தை பெருந்தோட்டக் கம்பனியின் நிறைவேற்று அதிகாரியுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடி, குறித்த வீட்டை அமைப்பதற்கு அனுமதியைப் பெற்றுக்கொடுத்ததுடன், அந்த வீட்டுக்கு அத்துமீறி சேதங்களை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பணிப்புரை விடுத்தார்.
அதேவேளை, அந்த வீட்டில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்றுள்ள யுவதிக்குப் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில் ஒன்றையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த தோட்டத்துக்கு வீடமைப்புத் திட்டத்தைப் பெற்றுக்கொடுப்பதாகவும் மக்களிடம் உரையாடும்போது அமைச்சர் உறுதியளித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.நிரஞ்சன் குமார், கஹவத்தை மாவட்ட தலைவர் பத்மநாதன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் சென்றிருந்தனர்.