‘சனல் 4’ குறித்து முதலில் உள்ளக விசாரணை! தேவையேற்பட்டாலே சர்வதேச விசாரணை! – பிரதமர் தினேஷ் அறிவிப்பு.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய முதலில் உள்ளக விசாரணை நடைபெறவுள்ளது. குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.”
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் தேவையேற்பட்டால் மாத்திரமே சர்வதேச விசாரணை தொடர்பில் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலை முன்வைத்து அரசியல் நடத்த எவருக்கும் இடமளியோம் என்றும், ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தே தீரும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
இதேவேளை, சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும் சாதகமான நடவடிக்கையாக ஜனாதிபதி இந்தக் குழுவை நியமிக்கவுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாசகார ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் இதே போன்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். எனவே, இந்த நிலைமை எரியும் நெருப்பில் வைக்கோல் சேர்ப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைகளை பரந்தளவில் கவனத்துக்குக் கொண்டு வந்து அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்காக, இந்தத் தூண்டுதல் ஏற்படுத்தும் கூற்றுக்களை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசு உத்தேசித்துள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
“தற்போதைய நிலைமையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விரிவாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ள இந்த இரண்டு அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.” – என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.