பஞ்சராகி நின்ற வேன் மீது லொறி மோதல்! சாலையில் ஓரமாக இருந்த 7 பெண்கள் பலி

தமிழக மாவட்டம், திருப்பத்தூர் அருகே வேன் மீது லொறி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் சுற்றுலா செல்வதற்காக இரண்டு வேன்களில் சென்றுவிட்டு தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது, நாட்றம்பள்ளி அருகே உள்ள சண்டியூர் அருகே வந்து கொண்டிருந்த போது ஒரு வேன் பஞ்சர் ஆகியுள்ளது. உடனே, வேனை சாலையோரத்தில் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த டிப்பர் லொறி ஒன்று வேன் மீது மோதியது. இதில் வேனின் பின்பகுதி நொறுங்கியது.
அந்த சமயத்தில், வேனில் இருந்த பெண்கள் சிலர் கீழே இறங்கி சாலையின் ஓரமாக அமர்ந்திருந்தனர். அவர்களின் மீது, வேன் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் உயிரிழந்தனர்.
இதனையறிந்த திருப்பத்தூர் பொலிசார், விரைந்து வந்து காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 7 பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில், தப்பி ஓடிய லொறி ஓட்டுநரை பொலிசார் தேடி வருகின்றனர். மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.