தாணேயில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் பலி
தாணேயில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக தாணே மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள 40 மாடிகளைக் கொண்ட ருன்வால் காம்பிளக்ஸ் கட்டடத்தில் நேற்று மாலை தொழிலாளர்கள் லிப்ட்டை பயன்படுத்தி கீழே இறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் பலியானார்கள்.
இறந்தவர்கள் மகேந்திர சௌபால் (32), ரூபேஷ் குமார் தாஸ் (21), ஹாரூன் ஷேக் (47), மித்லேஷ் (35), கரிதாஸ் (38) மற்றும் சுனில் குமார் தாஸ் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இறந்த ஏழாவது நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிப்டில் மொத்தம் ஏழு தொழிலாளர்கள் இருந்தனர், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக தாணே மாநகராட்சி திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லிப்டின் கயிறு அறுந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.