ஸ்டாலின்-பைடன் சந்திப்பு.
ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு தலைமை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா, அந்த அமைப்பின் உச்சநிலை மாநாட்டை தலைநகர் புதுடெல்லியில் வெற்றிகரமான முறையில் செப்டம்பர் 9, 10ஆம் தேதிகளில் நடத்தி முடித்தது.
அந்த இரண்டு நாள் மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமன்றி இதர நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாநாட்டையொட்டி இந்திய அதிபர் திரௌபதி முர்மு சார்பில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் இந்திய தலைவர்களுக்கும் சனிக்கிழமை இரவு பிரம்மாண்டமான விருந்தளித்துச் சிறப்பிக்கப்பட்டது.
அந்த விருந்தில் 500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தங்கத் தட்டிலும் வெள்ளி தட்டிலும் பரிமாறப்பட்டன. இதற்காகவே இந்திய அரசாங்கம் 18 பேர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உணவுப்பொருள்களின் ருசியின் தரத்தை உறுதிப்படுத்தியது.
அந்த விருந்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து மகிழ்ந்தார்.
அது பற்றி முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் இணையத்தளத்தில் படத்துடன் பல விவரங்களைத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்த தமிழக முதல்வர் அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். அந்தச் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மோடி, அதிபர் முர்மு, துணை அதிபர் ஜெகதீப் தன்கர், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் உடனிருந்ததாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறினார்.