பஞ்சாப் மாகாணத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி- 50 பேர் காயம்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் மேரியமாபாத்தில் பிரபல தேசிய மரியன்னை கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்க நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டத்திற்கு பேருந்து ஒன்றில் ஏராளமானோர் வந்து கொண்டிருந்தனர். பேருந்து ஷெய்குபுராவில் உள்ள கன்கா டோக்ரான் என்ற இடத்தில் வந்தபோது, திடீரென கவிழ்ந்தது.
இதில் 6 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். அளவுக்கு அதிகமானோர் பேருந்தில் பயணம் செய்ததும், வளைவான பகுதியில் டிரைவர் வேகமாக சென்றதும் விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1949-ம் ஆண்டில் இருந்து அன்னை மேரி பிறந்த தினம் கொண்டாட்டம் தேசிய மரியன்னை ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள சென்றபோதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது. மேரியமாபாத் அன்னை மேரி நகராக அறியப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி வேன் ஒன்று எரிபொருள் டேங்கர் லாரியுடன் மோதி, தீப்பிடித்து எரிந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.