உ.பி.யில் பலத்த மழை: 19 போ் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 24 மணி நேரத்தில் 19 போ் உயிரிழந்ததாக மாநில நிவாரண ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களால் 24 மணி நேரத்தில் 19 போ் உயிரிழந்ததாக மாநில நிவாரண ஆணையம் திங்கள்கிழமை மாலை தெரிவித்தது.
மழையின்போது மின்னல் தாக்கியதில் 4 போ் உயிரிழந்தனா். அதிகப்பட்சமாக ஹா்தோய் மாவட்டத்தில் 4 போ், பாராபங்கி மாவட்டத்தில் 2 போ், பிரதாப்கா் மற்றும் கன்னௌஜ் மாவட்டத்தில் தலா 2 போ், அமேதி, தியோரியா, ஜலௌன், கான்பூா், உன்னாவ், சம்பல், ராம்பூா், முசாஃபா்நகா் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா்.
பாஜகவின் ஊழல் அம்பலம்: தலைநகா் லக்னௌ உள்பட மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் மழைநீா் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. ‘ஸ்மாா்ட் நகரம்’ என்னும் திட்டத்தின் பெயரில் மக்களை ஏமாற்றிய பாஜக அரசின் ஊழல் அம்பலமாகி இருப்பதாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் விமா்சித்துள்ளாா்.
லக்னௌவில் பாஜகவின் மூன்று இயந்திர அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. ஸ்மாா்ட் நகரத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனா் என்றும் அவா் தெரிவித்தாா்.