மழையால் அடைத்துக் கொண்ட வடிகால் – வெறும் கையால் சுத்தம் செய்த பெண் காவல் அதிகாரி
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சில சமயம் தங்களுடைய அடிப்படை கடமையை தாண்டி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஏதேனும் சிறப்புக்குரிய காரியங்களை செய்வது உண்டு. குறிப்பாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக இக்கட்டான விஷயங்கள் ஏதேனும் நடந்தேறும்போது, காவல்துறையின் ஒத்துழைப்பு மிக அவசியமாக தேவைப்படும்.
ஒரு பணியை ஒருங்கிணைப்பு செய்வது, உத்தரவுகளை பிறப்பிப்பது என்பதோடு மட்டுமல்லாமல், சிக்கலுக்கு எப்படி தீர்வு காணலாம் என்று உணரும் பக்குவம் உடையவர்கள் இன்னும் ஒரு படி மேலே செல்கின்றனர். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம், ஹைதாராபாதில் அண்மையில் கனமழை பெய்தபோது பெண் காவல் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கை பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
பெண் அதிகாரியின் இந்த நடவடிக்கை குறித்த வீடியோவை, இன்ஸ்டாகிராம் தளத்தில், ஹைதராபாத் நகர போக்குவரத்து காவல் துறையினர் பகிர்ந்துள்ளனர். டி.தனலெட்சுமி என்ற அந்த பெண் காவல் அதிகாரி, பணியில் இருந்தபோது கனமழை பெய்தது. அதேசமயம், மேம்பாலத்தின் அருகே உள்ள வடிகால் ஒன்றில் குப்பைகளும், கழிவுப் பொருட்களும் அடைத்துக் கொண்டு நின்றதால் அப்பகுதியில் மழைநீர் வெள்ளம் போல தேங்க தொடங்கியது.
அப்போது உடன் இருந்த காவலருடன் இணைந்து, வெறும் கைகளாலேயே அந்த குப்பைகளை அகற்றும் பணியை தனலெட்சுமி மேற்கொண்டார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே மழைநீர் சுமூகமாக வெளியேறியது.
பொதுசேவை நோக்கத்துடன் பெண் காவல் அதிகாரி மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. வலைதள யூசர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “உங்கள் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன் மேடம். இது உண்மையாகவே மகத்தான பணி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்த விஷயங்களை, காவல்துறை தனியாக டிவி சானல் மூலமாக பகிர்ந்து கொள்ள வேண்டும், அந்த வகையில் பொதுமக்களுடன் நெருக்கமாகலாம் என்று மற்றொரு யூசர் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுமார் 17 மாவட்டங்களில் 115 எம்.எம். முதல் 157 எம்.எம். வரையில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக மாநிலம் முழுவதிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மழை காரணமாக பல பகுதிகள் தொடர்பின்றி தனித்து விடப்பட்டுள்ளன. மழையின் எதிரொலியாக உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 3 நபர்கள் பலியாகியுள்ளனர். ஹைதராபாத் நகரில் திறந்து கிடந்த மழைநீர் வடிகாலில் மூழ்கி 4 வயது குழந்தை ஒன்று பலியாகியது. அடுத்தடுத்து மழை தொடர்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.