சிங்கப்பூரில் மனைவியை கொலை செய்த இலங்கையர் போலீசில் சரண்
ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் இருக்கும் ‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் மனைவியைக் கொன்றதாக இலங்கையைச் சேர்ந்த 30 வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் திங்கட்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த ஆடவரின் பெயர் ஈஷான் தாரக . அவருடைய 32 வயது மனைவியின் பெயர் தியவன்னாகே செவ்வந்தி மதுக குமாரி.
ஈஷான், கடந்த சனிக்கிழமை காலை 10.45 மணிக்கும் மாலை 4.42 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவருடைய மனைவியை ‘ஹோலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டல் அறையில் வைத்து கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அன்று மாலை 5.05 மணியளவில் கிட்டத்தட்ட 1.5 கிமீ தொலைவில் இருக்கும் மரீன் பரேட் காவல் நிலையம் சென்ற ஈஷான் தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அவரைக் காவல்துறை கைது செய்தது.
பின்பு ஹோட்டல் அறைக்கு விரைந்து சென்ற காவல்துறை அங்கு நிறைய வெட்டுக்காயங்களுடன் அசைவின்றிக் கிடந்த பெண்ணைக் கண்டனர்.
அந்த பெண் இறந்துவிட்டதாகத் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அறிவித்தனர்.
ஹோட்டல் அறையிலிருந்து கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் காவல்துறை கைப்பற்றியது.
ஈஷான், நீதிமன்றத்தில் திங்கட்கிழமை காணொளி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர், சிங்கப்பூரில் இருக்கும் இலங்கை தூதரகத்தை அணுகி தனக்கென ஒரு வழக்கறிஞரை வழங்குமாறு நீதிமன்றத்திடம் முறையிட்டார்.
இந்த வழக்கு குறித்து இலங்கை தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைப்பெற்று வருவதால் ஈஷான் யாருடனும் தொடர்புகொள்ள முடியாது எனவும் அரசுதரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஈஷானை ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றத்தை அரசுதரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
குற்றம் நடந்த இடத்தை மீண்டும் பார்வையிடவும் சாட்சிகளைச் சேகரிக்கவும் அவரைத் தடுப்புக் காவலிருந்து வெளியே அழைத்துச் செல்ல அனுமதி அளிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தார்.
அவர் இம்மாதம் 18ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்படலாம்.