பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தான் நல்லூர் கந்தன்! (Photos)
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தேர்த் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
காலை 6.15 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் வள்ளி – தெய்வானை சமேதரராய் காலை 7 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தொடர்ந்து வள்ளி – தெய்வானை சமேதரராய் தேரில் வெளி வீதி உலா வந்த ஆறுமுகப் பெருமான் தேர் இருப்பிடத்தை வந்தடைந்தார்.
இன்றைய தேர்த் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர்.
நாளை காலை 6 மணியளவில் தீர்த்தோற்சவமும், மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.