குண்டுத் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்கவில்லை ராஜபக்ஷக்கள்! – பொய்ப் பரப்புரை மூலம் மொட்டுவை வீழ்த்த முடியாது என பஸில் விளாசல்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய்ப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மொட்டுக் கட்சியை வீழ்த்த முடியாது.”
‘
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சூளுரைத்தார்.
“தாங்கள் போட்ட தாளத்துக்கு ஆடவில்லை என்ற காரணத்துக்காகவே ராஜபக்ஷக்களைச் சில சர்வதேச நாடுகள் பகைத்தன. அவர்கள் போடும் தாளத்துக்கு ஆட ராஜபக்ஷக்கள் பொம்மைகள் அல்லர்” – என்றும் அவர் விளாசித் தள்ளினார்.
“இன்றும் ஒருசில சர்வதேச நாடுகள் மொட்டுக் கட்சியையும் ராஜபக்சக்களையும் அடியோடு வீழ்த்தும் நோக்கில் செயற்படுகின்றன. ஆனால், அவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒருபோதும் வெற்றியளிக்காது” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மொட்டுக் கட்சியோ அல்லது ராஜபக்ஷக்களோ குண்டுத் தாக்குதல்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்கவில்லை. பல இலட்சம் மக்களின் ஒருமித்த ஆணையுடன்தான் ஆட்சி அதிகாரத்துக்கு நாம் வந்தோம். அந்த ஆணையை நாம் இன்னமும் இழக்கவில்லை. மீண்டுமொரு தேர்தல் நடந்தால் எமக்கான மக்கள் ஆணை நிரூபணமாகும்” – என்றும் பஸில் ராஜபக்ஷ மேலும் கூறினார்.