கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்..பொதுமுடக்கம் அமல்
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 160 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கேரளா முழுவதும் மக்கள் முக்ககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் 5 கிலோமீட்டர் அளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அயன்சேரி, மருதோன்கரா, வில்யபள்ளி உள்ளிட்ட 7 பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 43 வார்டுகளை, கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.இந்த வார்டுகளில் வெளிநபர்கள் யாரும் நுழைய அனுமதி இல்லை என்றும், யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இயங்கியதைப் போல அரசு அலுவலகங்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பள்ளிகள், வங்கிகள், அங்கன்வாடிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 வார்டுகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் வெளி வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி மற்றும் சானிடைசர் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் 75 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணூர், வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் கேரள சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கேரளா மாநில எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களான நீலகரி, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்டவற்றில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொற்று நோய் தடுப்பு இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் நோய் தடுப்பு மருந்து தெளித்தல், எல்லை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், கவச உடைகள் இருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.