விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன்? நீதிபதி கேள்வி
அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களால் என்ன பயன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊர்வலம் செல்ல அனுமதி கோரி வழக்கு
வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் 13 இடங்களிலும், கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் விநாயகருக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தி, ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக அரசு அரசாணை வெளியிட்டதன் படி விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்தந்த இடங்களில் உள்ள சட்ட ஒழுங்கை பொறுத்தே சிலை வைக்க வேண்டுமா, இல்லையா என்ற முடிவை உள்ளூர் பொலிஸார் எடுத்து வருகின்றனர்” என்று கூறினார்.
ஊர்வலங்களால் என்ன பயன்?
இதனை தொடர்ந்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசின் அரசாணைக்கு மாற்றாக விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள மாட்டாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
மேலும், சிலை வைத்து ஊர்வலம் நடத்த வேண்டும் என்று விநாயகர் கூறவில்லை என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பினார்.