கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் – துப்பாக்கி ரவை ஒன்றும், ஆடைகளும் மீட்பு
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் எட்டாம் நாள் அகழ்வாய்வு இன்று இடம்பெற்றது. இதன்போது ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அத்துடன் தடயப் பொருட்களாகத் துப்பாக்கி ரவை ஒன்றும், ஆடைகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில், நீளக் காற்சட்டையில் 1124 என்ற இலக்கம் இடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எட்டு நாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 14 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்று அகழ்வாய்வு இடம்பெற்ற பகுதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோநோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.