யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் மற்றும் ஊழியர்களுக்கு செல்போன் தடை!
யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் சேவைக் காலத்தில்
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவின் பேரில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த சிறுமி அனுமதிக்கப்பட்ட வார்டில் உள்ள தாதியின் கவனக்குறைவால் அவரது கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாதி நோயாளியை முறையாக கவனிக்கவில்லை என புகாரளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாதியருக்கு எதிராக சாட்சியமளித்த பல நோயாளிகள், தாதி தனது கையடக்கத் தொலைபேசியைக் கையாள்வதற்கே நாளின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்வதாகவும், நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு சரியாக பதிலளிப்பதில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முதற்கட்டமாக கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் வடக்கில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் தாதியர்கள் மற்றும் ஊழியர்களினதும் கையடக்க தொலைபேசி பாவனையை தடை செய்ய வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார் என தெரியவருகிறது.