கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு 6 ஆக உயர்வு!
கேரளத்தில் நிபா வைரஸால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் செப். 11 ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததையடுத்து சந்தேகத்தின்பேரில் அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னர் அது நிபா தொற்றுதான் என உறுதி செய்யப்பட்டது.
இறந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களுடன் சேர்த்து 5 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆகவும் தற்போது 4 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு கட்டுப்பாட்டு மையம் அமைத்து தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கோழிக்கோட்டில் செப். 17 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு பகுதியில் மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.