கோட்டாவை மீண்டும் அரசியலுக்குள் இழுக்க முயற்சிப்பது படுமுட்டாள்தனம்! – இப்படிக் கூறுகின்றது மொட்டு.
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வரமாட்டார் என்று நாம் நினைக்கின்றோம். ஏனெனில் அவர் மீண்டும் அரசியலுக்குள் வந்து முட்டாளாக விரும்பமாட்டார்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“மொட்டுக் கட்சியைக் கோட்டாபய வெறுக்கவில்லை. நாமும் அவரை வெறுக்கவில்லை. ஓய்வில் இருக்கும் அவரை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவர முயற்சிப்பது படுமுட்டாள்தனம்.” – என்றார்.
இதேவேளை, “கோட்டாபய அரசியலுக்கு ஒரு தடவை வந்தார். அதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் ஒதுங்கிவிட்டார். அதிகாரத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பது அல்ல அவரின் நோக்கம். மீண்டும் அரசியலுக்கு வரும் அளவுக்கு வாழ்க்கையில் பக்குவம் இல்லாத நபர் அவர் அல்லர்” – என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை அண்மையில் சந்தித்த எம்.பிக்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.