வடக்கு, கிழக்கில் படைக் குறைப்பு இல்லை! – இராணுவப் பேச்சாளர் திட்டவட்டம்.

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளைத் தளபதிகளின் எணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொதுமக்களின் பெருமளவான காணிகளும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவ்வப்போது படையினரின் தேவைக்காகக் காணிகளும் அளவீடு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என அரசியல்வாதிகளும், பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், வடக்கு, கிழக்கில் அதிகளவான படையினர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கில் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதில்லை என இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.