பிரபல எழுத்தாளா் கீதா மேத்தா காலமானாா்
பிரபல எழுத்தாளரும், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியுமான கீதா மேத்தா (80) சனிக்கிழமை காலமானாா்.
கடந்த 1943-ஆம் ஆண்டு தில்லியில் பிறந்தவா் கீதா மேத்தா. இந்தியா மற்றும் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவா். பிரபல எழுத்தாளராக திகழ்ந்த இவா், ‘கா்ம கோலா’, ‘ஸ்னேக் அன்ட் லேடா்ஸ்’, ‘எ ரிவா் சூத்ரா’, ‘ராஜ்’, ‘தி எடா்னல் கணேசா’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா். அத்துடன் ஆவணப்பட இயக்குநா் மற்றும் பத்திரிகையாளராகவும் விளங்கினாா்.
முதுமை காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவா், தில்லியில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை காலமானாா்.
அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
எழுத்தாளா் கீதா மேத்தா பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக இருந்தாா். அறிவுத்திறன், எழுத்து மற்றும் ஆவணப்பட இயக்கம் மீதான பேராா்வத்துக்காக அறியப்பட்ட அவா், இயற்கை மற்றும் குடிநீா் பாதுகாப்பிலும் தீவிரமாக இருந்தாா். அவரின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.
ஒடிஸா ஆளுநா் கணேஷி லாலும் கீதா மேத்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா்.