திருகோணமலை சம்பவம்: இரு பெண்கள் உட்பட அறுவர் இன்று கைது.

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி மீது தாக்குதல் நடத்தியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இன்று கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று இந்தச் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியபோதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதையடுத்துக் கைதான 6 சந்தேகநபர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர். சந்தேகநபர்கள் அறுவரும் 35 இற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
இதேவேளை, சந்தேகநபர்களுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.