காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை: இந்தியா – கனடா உறவில் விரிசல்
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை சம்பவத்தில், இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது, இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புப் போராடி வருகிறது. கனடாவில் இருந்துகொண்டு, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசிடம் இந்தியா பல முறை வலியுறுத்தியும் இருக்கிறது.
இந்த நிலையில், காலிஸ்தான் டைகர் படைப்பிரிவு தலைவர் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்தக் கொலையில், இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒரு சில புகைப்படங்களுடன் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
இதனை அடிப்படையாக வைத்து, நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசு அதிகாரிகளுக்கும், காலிஸ்தான் தலைவர் கொலைக்கும் தொடர்பிருப்பதற்கான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.
ஆனால் இதனை இந்தியா மறுத்திருந்தது. உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்திருந்தது.
கனடா பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம் என்று அறிவித்தார்.
கனடா அரசு, இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியிருந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதரக அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கனடா நாட்டு தூதர் 5 நாள்களுக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிந்திய விரிவான செய்தி
ஓட்டவா: இந்தியா – கனடா மோதல் விவகாரத்தில் தற்போது அமெரிக்கா மூக்கை நுழைத்து உள்ளது. இதனால் இந்தியாவிற்கு பிரஷர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – கனடா மோதல் 24 மணி நேரத்தில் உச்சம் பெற்றுள்ளது. இரண்டு நாட்டு அரசுகளும் எதிர் நாட்டின் தூதரகத்தை சேர்ந்த சீனியர் நிர்வாகி ஒருவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியே அனுப்பி உள்ளது. இதில் உடனடியாக சமாதானம் ஏற்படும் அறிகுறிகள் தெரியவில்லை.
சமாதானம் ஏற்படாத பட்சத்தில் இரண்டு நாட்டு உறவு முறியும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கனடாவில் இருக்கும் லட்சோப லட்சம் பேர் பாதிக்கப்படலாம். அதோடு கனடாவுடன் மோதலால் கனடாவிற்கு நெருக்கமான அமெரிக்கா,ஆஸ்திரேலியா , பிரான்ஸ், யுகே என்றும் மேற்குலக நாடுகளின் உறவும் முறியும் வாய்ப்புகள் உள்ளன.
மேற்கை இந்தியா ஏற்கனவே உக்ரைன் போரில் முறைத்தது இந்தியா. இந்த முறை நேரடியாக இந்தியாவின் மீது கொலை குற்றமே சுமத்தப்பட்டு இருப்பதால் இந்தியாவிற்கு பிரஷர் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகார்?: சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.
அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே “நம்பகமான” தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.
ஜோ பிடன்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் உலக நாடுகளை இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஒன்று திரட்ட கனடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அவர் உலக நாட்டு தலைவர்களுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கனடா பிரதமர் ட்ரூடோ, காலிஸ்தானி சார்பு தலைவர் நிஜார் கொலையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோரிடம் எழுப்பினார் என்று கூறப்படுகிறது.
ஜோ பிடன் உடன் இவர் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தியா – கனடா மோதல் விவகாரத்தில் தற்போது அமெரிக்கா மூக்கை நுழைத்து உள்ளது. இதனால் இந்தியாவிற்கு பிரஷர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறுகையில், “பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். கனடா அரசுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். கனடாவின் விசாரணை தொடர வேண்டும் .குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது முக்கியமானது. அதனால் நாங்கள் விசாரணையை ஆதரிக்கிறோம் என்று வெள்ளை மாளிகை இந்தியாவிற்கு எதிரான தொனியில் பேசி உள்ளது.