பழ வியாபாரத்தை கடுமையாக தாக்கிய நிபா வைரஸ்
கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக, கோழிக்கோடு மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் பழ வியாபாரம் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வியாபாரமாகும் பழங்களில் 50 சதவீதம் அளவுக்கு பழ விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
வௌவால்கள் கடித்த பழங்கனை மக்கள் சாப்பிட வேண்டாம் என்று நிபா வைரஸ் தடுப்ப வழிகாட்டு நெறிமுறைகளில் கேரள அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால், மக்கள் ஒட்டுமொத்தமாக பழங்கள் வாங்குவதையே தவிர்த்துவிட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் எல்லாமே பெரும்பாலும் வெளிமாநிலங்களில் உற்பத்தியாகுபவைதான்.
கடந்த சில நாள்களாக 70 சதவீதம் அளவுக்கு மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். ஒரு லாரி பழங்கள் ஒரு நாளில் விற்றுத் தீரும். ஆனால், மூன்று நாள்களுக்கு முனபு வந்த லாரி பழத்தில் 50 சதவீதம் கூட இன்னமும் விற்பனையாகவில்லை என்கிறார்கள்.
விற்பனையாகாத பழங்கள் பெரும்பாலும் அழுகிவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை இருவா் உயிரிழந்தனா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் உள்பட 4 போ் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது நிபா தொற்றின் பரவல் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.