மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்!
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் அமா்வு பழைய கட்டடத்தில் நேற்று நிறைவடைந்த பின்னா் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் புதிய நாடாளுமன்றத்தில் கூடும் முதல் மக்களவை கூட்டத்தில் இந்த மசோதாவை சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதம் புதன்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்த மசோதாவானது நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.