கோட்டாபய அரசுக்கு எதிராக பெரும் சாத்வீகப் போராட்டம்!
– வெள்ளிக்கிழமை இறுதி முடிவு என மாவை அறிவிப்பு
தமிழரின் அஞ்சலி உரிமையையும் பறிக்கும் கோட்டாபய அரசின் இராணுவ ஆட்சி அணுகுமுறையை எதிர்கொள்வது எப்படி என்பதை ஆராய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (15) ஒன்றுகூடினர்.
யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அனைத்துத் தரப்பும் ஓரணியாகத் திரள்வது குறித்து ஆராயப்பட்டது.
அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கு தழுவியரீ தியில் மாபெரும் ஜனநாயக வழிப் போராட்டம் நடத்துவது எனவும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தப் போராட்டம் என்ன? எப்படி அமைய வேண்டும்? என்பதை அனைத்துத் தமிழ் தரப்புக்களுடனும் ஆராய்ந்து முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகள், பல்கலைகழகசமூகம், வர்த்தர்கள், மதகுருமார், பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலந்துரையாடல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திலீபன் நினைவு நாளுக்குள்ளேயே போராட்டம் நடக்கலாம் என அறியமுடிகின்றது.
நேற்றைய கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, புளொட் கட்சியின் தலைவர் த.சித்தாா்த்தன் எம்.பி., சி.சிறீதரன் எம்.பி., முன்னாள் எம்.பி. ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் எஸ்.ஈசன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன் கனகரட்ணம் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கலந்துரையாடலின் இறுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் ஊடாக தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய அரசால் பல ஜனநாயக மறுப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டமையை நாம் ஒரு ஜனநாயக மறுப்பாக, மனித உாிமை மீறலாகப் பாா்கிறோம். இவ்வாறான செயற்பாடுகள் தொடா்ந்தும் இடம்பெறும் என நாங்கள் எதிா்வு கூறுகின்றோம்.
கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னா் அதாவது கடந்த ஆட்சிக் காலத்தில் மக்களுடைய உணா்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டது. குறிப்பாக மாவீரா் நாள் உள்ளிட்ட நினைவேந்தல்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அரசால் அவற்றுக்குத் தடைவிதிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு தியாகி திலீபனின் நினைவேந்தல் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களுக்கு அரசே முழு பொறுப்பாளி. எனவே, இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடா்பாக இன்று நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். இதனடிப்படையில் எதிா்வரும் வெள்ளிக்கிழமை நல்லுாா் இளங்கலைஞா் மண்டபத்திலேயே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக எப்படிச் செயற்படுவது? என்ற தீா்மானத்தை ஒருமனதாக எடுப்பதுடன், எடுக்கப்படும் தீா்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்தப் போகின்றோம் என்பதையும் தீா்மானிக்கவுள்ளோம். இதற்காக கட்சிகள், அமைப்புக்களுக்கு தனிப்பட்ட அழைப்புக்கள் விடுக்கப்படவுள்ளதுடன், இதனைப் பகிரங்க அழைப்பாகவும் விடுக்கின்றோம்” – என்றாா்.