முன்னாள் சிப்பாய் ‘ஆமி கமல்’ ஹெரோயினுடன் மாட்டினார்!

பிரதேசவாசிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த முன்னாள் இராணுவச் சிப்பாயான ‘ஆமி கமல்’ என அழைக்கப்படும் கமல் அருண ஷாந்த எனும் நபர் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரு இராணுவச் சீருடைகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிப்பண்ணைப் பொலிஸார் ஹேன்பிட்டிய பிரதேச வீடொன்றில் நடத்திய விசேட அதிரடி சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக, சட்டவிரோதமான முறையில் வெடிகுண்டுகள் மற்றும் ரி – 56 ரகத் துப்பாக்கி கைவசம் வைத்திருத்தல், பிரதேச ஆடைத் தொழிற்சாலை கொள்ளைச் உட்பட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த குற்றத்தின் பேரில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சிறைவாசம் அனுபவித்து அண்மையில் விடுதலை பெற்ற நிலையில், தனது மகனுடன் இணைந்து ஈசிகேஸ் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும், மகன் தற்போது குறித்த பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகி உள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிப்பண்ணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மத்தை, ஹேன்பிட்ட பகுதியில் வசிக்கும் ஆமி கமல் என அழைக்கப்படும் கமல் அருண ஷாந்த எனும் மேற்படி சந்தேகநபர் இலங்கை இராணுவத்தில் கோப்ரலாக சேவையாற்றிய காலத்தில் சட்ட விரோதமான முறையில் ரி – 56 ரக துப்பாக்கி ஒன்றைக் கைவசம் வைத்திருந்த குற்றத்தின் பேரில் சில வருடங்களுக்கு முன் சேவையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.