உலகளாவிய முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லை – நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி உரை.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகளாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என்றும், 12 சதவீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது காண முடிவதாகவும், ஏனைய முக்கியமான இலக்குகளில் 30 சதவீதத்தை இன்னும் அடைந்துகொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக நேற்று (20) ஆரம்பிக்கப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளால் 2015 இல் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் பின்புலம் தொடர்பில் இதன்போது தனது கவனத்தைச் செலுத்திய ஜனாதிபதி, அதே ஆண்டில், கோப் 21 அமைப்பின் 196 நாடுகளால் நிறைவேற்றப்பட்ட பெரிஸ் ஒப்பந்தம், முற்போக்கான உலகளாவிய முயற்சியாகும் எனவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும் பாரிய அளவிலான வளப்பற்றாக்குறை அதற்குத் தடையாக அமைந்துள்ளது.
மேலும், 2020 இல் ஏற்பட்ட கொவிட் நோய்த்தொற்று எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைந்துகொள்வதைத் தாமதப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்ததுடன், பல்வேறு துறைகளின் பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக முடங்கிப் போயின. இது ஏற்கனவே நிலவும் உலகளாவிய கடன் நெருக்கடியை அதிகப்படுத்தியது. இந்தச் சவாலான நிலை, இலங்கை உட்பட மேலும் பல்வேறு நாடுகளை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது. இந்த சூழ்நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் அபிவிருத்தி இலக்குகளை அடையக்கூடியதாக இருக்கிறதா என்பது இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
இலங்கை தொடர்பில் கூறுவதாயின், 2019 ஆம் ஆண்டின் முழுமையான மதிப்பீட்டுக்கமைய, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவீத முதலீடு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியும் இந்த இலக்கை அடைவதற்கு பெரும் தடையாக காணப்பட்டது.
இலங்கையின் காலநிலை சுபீட்சத் திட்டத்துக்கு மாத்திரம் 2030 ஆம் ஆண்டாகும்போது 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான முதலீடுகள் தேவைப்படும். அதனை நிறைவு செய்து கொள்வதும் பாரிய சவாலாகும்.
இக்கட்டான பொருளாதார நெருக்கடி நிலைமை இலங்கைக்கு மாத்திரமின்றி ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல நாடுகளை பாதித்துள்ளதுடன், வங்குரோத்து நிலையிலிருந்து மீளக்கூடிய நிலையிலிருந்த நாடுகள் கூட தற்போதைய நெருக்கடியின் விளைவுகளுடன் போராடுகின்றன.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை நிறைவேற்ற 2030 ஆம் ஆண்டுக்குள் 5.9 டிரில்லியன் நிதியுதவி தேவை என்பதை ஜி 20 உச்சிமாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியது.
மேலும், 2050 ஆண்டுக்குள் நிகர – பூஜ்ஜிய உமிழ்வை அடைய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 4 டிரில்லியன் வருடாந்த முதலீடு அவசியம்.
பல்வேறு நாடுகளைப் பாதிக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் சாத்தியமா என்பதை விமர்சன ரீதியாக ஆராய வேண்டும்.
புதிய உலகளாவிய நிதிச் சட்டத்துக்கான பெரிஸ் உச்சி மாநாடு நிதி சவால்களை எதிர்கொள்வதற்கான உறுதிப்பாடாக அமையும் என நம்புகின்றேன்.
எவ்வாறாயினும், உலகளாவிய நிதி மயமாக்கல் இந்த சிக்கலான மற்றும் அச்சுறுத்தலான நிலைமையை வெற்றிகொள்ள தீர்மானமிக்க நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.