புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் மோசம்! – செந்திவேல் தெரிவிப்பு.
“நடைமுறையில் இருக்கிற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் மோசமானது. இந்தச் சட்டம் அனைவருக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும்.”
இவ்வாறு புதிய மார்க்சிய லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்திவேல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த அரசு பொதுமக்களை மேலும் மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என அறிவித்து புதிய சட்டமொன்றைக் கொண்டு வருகின்றனர்.
உண்மையில் இந்த இரண்டு சட்டங்களையும் பார்க்கையில் இப்போது கொண்டு வரப்படுகின்ற சட்டம் மிகவும் ஆபத்தானது.
இந்தப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துக்கள் அனைவரையுமே மிக மோசமாகப் பாதிப்பதாகவே உள்ளது.
அதிலும் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை மேற்கொள்கின்றபோது அது பயங்கரவாதமாகக் கருதப்படும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுகின்ற ஆபத்து உள்ளது.
இந்த அரசின் புதிய சட்டமூலத்தில் அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மட்டுமல்ல குறிப்பாக ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்களை அடக்குவதற்குக் கூட புதிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றது.
இதனால் இனிவரும் காலங்களில் அரசுக்கு எதிராக யாரும் கை தூக்க முடியாத நிலை – பேனாவை எடுத்துக்கொள்ள முடியாத நிலை தோற்றுவிக்கப்படும் ஆபத்து உள்ளது.” – என்றார்.