20ஐ நிறைவேற்றியே தீருவோம் என்று பிரதமர் மஹிந்த சூளுரை

“முன்னுக்கு வைத்த காலை நாம் ஒருபோதும் பின்னுக்கு வைக்கமாட்டோம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவோம்”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆராய்வதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறப்புக் குழுவொன்றை அமைத்துள்ளமை முன்வைக்கப்பட்டுள்ள வரைவில் என்ன உள்ளது என்பது பிரதமருக்கே தெரியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது. இந்தநிலையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவின் உள்ளடக்கம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று எதிரணியினர் கூறுவது அவர்களுக்குத்தான் வெட்கக்கேடு. இது அவர்களின் சிறுபிள்ளைத்தனத்தை எடுத்துக்காட்டுகின்றது.

20ஆவது திருத்தத்தில் உள்ள ஒரு சில விடயங்கள் குறித்து மீளாய்வு செய்யுமாறு ஆளுந்தரப்பிலுள்ள ஒரு சிலர் என்னிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கமையவே அது தொடர்பில் ஆராயவே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்துள்ளேன்.

அவர்கள் குறித்த விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை என்னிடம் கையளித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பேன்.

’20’ தொடர்பில் அரசுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே சிறப்புக் குழுவை நான் நியமித்துள்ளேன் எனவும் எதிரணியினர் ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தக் கருத்துக்களையும் நான் அடியோடு நிராகரிக்கின்றேன்.

முன்னுக்கு வைத்த காலை நாம் ஒருபோதும் பின்னுக்கு வைக்கமாட்டோம். 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.