காலத்தை இழுத்தடிக்காது சர்வதேச விசாரணையை உடன் நடத்த வேண்டும்! – சபையில் ஹக்கீம் வலியுறுத்து.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து காலத்தை இழுத்தடிக்காது சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் 50 பக்கங்களுக்கும் மேல் எமது பாதுகாப்புத் துறையில் உள்ள பல்வேறு பிரிவினரிடையே உள்ள மோதல்கள், கருத்து வேறுபாடுகள் தொடர்பிலேயே கூறப்பட்டுள்ளது.
அது தொடர்பில் கூறும்போது முன்னாள் ஜனாதிபதியையும் வைத்து ஏதோவொன்று இந்த அரசுக்காகச் செய்யப்பட்டுள்ளது. அரச புலானாய்வு மற்றும் இராணுவப் புலனாய்வு ஆகியவற்றில் 7 ஆயிரம் பேர் இருக்கின்றபோதும் சம்பவம் தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை என்று நாட்டின் தலைவர் கூறியுள்ளார். அதற்கான காரணமே இப்போது வெளியில் வருகின்றது. மறைந்திருந்த சூத்திரதாரிகள் தொடர்பில் வெளிவராத சம்பவங்கள் வெளிவருகின்றன. இதன் உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.
இவ்வளவு பலமான புலனாய்வுத்துறை இருந்தும் சஹ்ரானின் சின்னக் குழுவினர் எப்படித் தாக்குதலை நடத்தினர் என்று ஆராய வேண்டும். சஹ்ரான் குழுவினர் எத்தனைனயோ இடங்களில் தங்கியிருந்துள்ளனர். பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பில் தெரியாது புலனாய்வுப் பிரிவினர் இருந்தனரா? சரியாக ஆராய்ந்தால் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சாரா எனும் புலஸ்தினி என்ற பெண்ணுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பில் இறந்தார் என்று கூறப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் நீதிமன்றத்துக்கு அவரின் அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படுகின்றது. அது எவ்வித கீறலும் இன்றி புதிதாகவே உள்ளது. அவர் அங்கே இருந்தார் என்று காட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. மூன்று தடவைகள் டீ.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. வெளிச் சக்தியின் தலையீட்டில் தகவல்கள் மறைக்கப்பட்டனவா என்ற சந்தேகங்களும் உள்ளன. இதனால் உண்மைகளை அறிய சர்வதேச விசாரணைகள் அவசியமாகும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து காலத்தை இழுத்தடிக்கக் கூடாது.” – என்றார்.