சனாதன விவகாரம் : உதயநிதி உள்ளிட்ட 14 பேருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சனாதனம் தர்மம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் உட்பட 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், தற்போதைக்கு இதனை வெறுப்பு பேச்சாக கருத முடியாது என்று கூறியுள்ளது.
சென்னையில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை கண்டித்து, சென்னையை சேர்ந்த ஜெகன்னாத் என்பவர் தொடர்ந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பெலா திரிவேதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அமைச்சர் பேசுவது ஏற்புடையதல்ல என்று மனுதாரர் கூறினார்.
இவ்வழக்கு தொடர்பாக, ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தை காவல்நிலையம் போன்று அணுகுவதாக விமர்சித்தனர். அப்போது மாநிலத்தின் அமைச்சரே வெறுப்பு பேச்சை ஊக்குவிப்பதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.
அமைச்சரின் பேச்சு எதைப்பற்றியது என்று கேட்ட நீதிபதிகள், உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், உள்துறை அமைச்சகம், சிபிஐ, தமிழ்நாடு அரசு, மாநில டிஜிபி, ஆ.ராசா, திருமாவளவன், சு.வெங்கடேசன், சேகர்பாபு உள்ளிட்ட 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இருப்பினும், அமைச்சரின் கருத்தை தற்போதைக்கு வெறுப்பு பேச்சு வழக்காக கருத முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரவித்துள்ளது.