இனவாதத்தைக் கையிலெடுத்து இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது! – ரணில் திட்டவட்டம்.
“இலங்கையில் இனிமேல் எவரும் இனவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைத் தக்கவைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ முடியாது. ஏனெனில் மக்கள் அனைவரும் விழிப்படைந்து விட்டார்கள். மக்களை எவரும் இனி ஏமாற்ற முடியாது.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்ற நியூயோர்க் சென்ற ஜனாதிபதி, அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் இலங்கையின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் செவ்வி வழங்கினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கை மக்கள், ஜனநாயக அரசியலில் மாற்றத்தை விரும்பினார்கள். அந்த மாற்றம் இறுதியில் ஏற்பட்டது. ஜனாதிபதிப் பதவியையும் நான் ஏற்க வேண்டி வந்தது. நாட்டின் பெரும் அரசியல், பொருளாதார சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்றேன். சவால்களை முறியடித்து – தடைகளைத் தாண்டி நாட்டை முன்னோக்கி நகர்த்துகின்றேன். இதற்கு நாட்டு மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புக்களும், ஆதரவுகளும் கிடைக்கின்றன. பல வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புக்களும், சர்வதேச நிறுவனங்களும் இலங்கை மீண்டெழ உதவிகளை வழங்கின. இப்போதும் வழங்கிக்கொண்டிருக்கின்றன.
எனது பதவிக் காலத்தில் தேசிய பிரச்சினைகளுக்கு இயன்றளவு படிப்படியாகத் தீர்வுகளைக் கண்டு வருகின்றேன்.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன ரீதியிலான பிரச்சினைகளைத் தூண்டிவிட சிலர் முனைகின்றனர். மீண்டுமொரு இன வன்முறை ஏற்பட ஒருபோதும் இடமளியேன்.” – என்றார்.