திருகோணமலையில் இன மோதலை ஏற்படுத்த அரசு திட்டம்! – சாணக்கியன் குற்றச்சாட்டு.
“திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள – தமிழ் இன மோதலை உருவாக்க அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது எனச் சந்தேகம் எழுந்துள்ளது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில் அண்மைக்காலமாக திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள – தமிழ் இனவாத முரண்பாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன. இதன் ஒரு கட்டமாகவே கஜேந்திரன் எம்.பியும் திருகோணமலையில் வைத்து சிங்களவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
எனவே, இனவாத மோதல்களுக்கு மூவின மக்களும் வாழும் திருகோணமலை மாவட்டம் பொருத்தமானதாக இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.” – என்றார்.