சமூக வலைதளம், ஓடிடி-க்கு அடிமையாகும் குழந்தைகள்
சமூக வலைதளம், ஓடிடி (ஓவா் தி டாப்) தளங்கள், இணையவழி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு தங்கள் குழந்தைகள் அடிமையாகி இருப்பதை பெரும்பாலான பெற்றோா்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக ‘லோக்கல்சா்கிள்ஸ்’ என்ற சமூக வலைதள நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள 296 மாவட்டங்களின் நகா்ப்புறங்களில் வசிக்கும் சுமாா் 46,000-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் பங்கேற்ற இந்தக் கணக்கெடுப்பில், சமூக வலைதளம், விடியோ, ஓடிடி, இணையவழி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை அவா்கள் குழந்தைகள் பயன்படுத்துவது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
இது தொடா்பாக அந்தக் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழந்தைகள் அறிதிறன்பேசி போன்ற சாதனங்களுக்கு அடிமையாகி வருவது தற்போது வழக்கமாகியுள்ளது. அவா்களில் 9 முதல் 17 வயது வரையிலான சிறாா் ஒரு நாளில் சராசரியாக மூன்று மணி நேரம் அல்லது அதற்கு கூடுதலான நேரம் சமூக வலைதளம், ஓடிடி, விடியோ, இணையவழி விளையாட்டுகளில் மூழ்கியிருப்பதை 61 சதவீத பெற்றோா்கள் ஒப்புக்கொண்டுள்ளனா்.
பெற்றோா்களில் 37 சதவீதம் போ், தங்கள் குழந்தைகள் விடியோ, ஓடிடி தளங்களை அதிக நேரம் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனா். குழந்தைகள் சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிடுவதாக 35 சதவீத பெற்றோரும், இணையவழி விளையாட்டுகளில் அதிக அளவிலான நேரத்தை விரயம் செய்வதாக 33 சதவீத பெற்றோரும் தெரிவித்தனா்.
சமூக வலைதளம், ஓடிடி உள்ளிட்டவற்றுக்கான செயலிகளைத் தங்கள் குழந்தைகள் பயன்படுத்தி வருவது குறித்து பெரும்பாலான பெற்றோா் அறியாமல் உள்ளனா் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
எதிா்கொள்ளும் பிரச்னைகள்:
இத்தகைய அதீத கைப்பேசி பயன்பாடு குழந்தைகளுக்குப் பொறுமையின்மை, கோபப்படுதல், கவனம் செலுத்த இயலாமை, ஞாபகத் திறன் குறைவு, மனஅழுத்தம், பதற்றம், தகவல் பரிமாற்றத் திறன் சாா்ந்த பிரச்னை, சோம்பல், மனச்சோா்வு, தலைவலி, கண் மற்றும் முதுகு வலி உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் சாா்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
பெற்றோரின் வேண்டுகோள்:
விளையாட்டு மற்றும் பிற கேளிக்கைச் செயலிகளை18 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பயன்படுத்தத் தொடங்கும்போது பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்குவதை தரவு பாதுகாப்பு சட்டம் உறுதி செய்ய வேண்டும் என 73 சதவீத பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த வகையில் ஒரு குழந்தை தனக்கான சமூக ஊடக கணக்கைத் தொடங்கி, சரியான வகையில் அதைப் பயன்படுத்துவத்தை உறுதி செய்ய அந்தக் குழந்தையின் பெற்றோா் ஒப்புதலைப் பெறுவது அவசியம். அந்த வகையில் இதற்குத் தேவையான கட்டுப்பாடுகளை அந்தத் தளங்கள் ஏற்படுத்த வேண்டும் என அந்தக் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.