நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கவே முடியாது! – நீதி அமைச்சர் திட்டவட்டம்.

“இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு. அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறலாகும்.”
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் மக்கள் மீண்டுமொரு போரை விரும்பவில்லை. விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்வது அவர்களின் நோக்கம் அல்ல. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியாக நடத்தினால் நாம் அதற்கு இடமளிக்க வேண்டும்.
திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் இன மோதல் ஏற்படும் என்று தவறான கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் எவரும் பரப்பக்கூடாது.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினார்கள். தற்போதைய ஆட்சியிலும் அவ்வாறான நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் நடத்தத் தடை போட முடியாது.
ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் மூலம் தமிழ் அரசியல்வாதிகள் சுயலாபம் தேட முற்படக்கூடாது. சிங்கள மக்களை வெறுப்பேற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது.
மூவின அரசியல்வாதிகளும் மூவின மக்களின் உறவுப் பாலமாகத் திகழ வேண்டும்.” – என்றார்.