கமத்தொழில் அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மகிந்தானந்த அலுத்கமகே அவர்கள் நேற்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
குறித்த சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றது. “சுபீட்சமான நோக்கில் விவசாயமறுமலர்ச்சி” எனும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மெற்கொண்டிருந்த குறித்த குழுவினர் இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையம் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்திருந்தனர். தொடர்ந்து பிற்பகல் 5 மணியளவில் பரந்தனில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தில் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை சந்தித்தனர்.
இதன்போது விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கேட்டறிந்தனர்.
குறித்த சந்திப்பில் கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே அவர்கள் கால்நடை வளங்கள் பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் நெல் மற்றும் தானிய வகைகள் சேதன உணவுகள் மரக்கறிகள் பழவகைகள் மிளகாய் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் ஷீந்திர ராஜபக்ஷ உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அங்கயன் இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் ஆகியோருடன் திணைக்களங்கள் சார் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
விவசாயிகள் பால் உற்பத்தியாளர்களிற்கு மானியங்கள் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் விவசாயத்திற்கு தேவையான பசளை மானியமாக வழங்கப்படவுள்ளது. அதேவேளை மரக்கறி மஞ்சள் கிழங்குக்கு போன்றவற்றுக்கு விதைகளும் மானியமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. குறித்த உற்பத்தி பொருட்களுக்கான சந்தைவாய்ப்புக்களையும் ஏற்றுமதிகளையும் முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயத்திற்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூவல் நீர்ப்பாசன முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் உள்ளுர் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான பசளை களஞ்சியம் ஒன்றை அமைத்து அதன் ஊடாக மானியமாகவும் குறைந்த விலையிலும் விவசாயத்திற்கு தேவையான பசளைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.