சிவகார்த்திகேயனுடன் ஏ.ஆர். முருகதாஸ். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது 23-வது படத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா விதத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.