பெங்களூரு பந்த்: எந்தெந்த சேவைகள் முடங்கும் அபாயம்?
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடும் மத்திய அரசுக்கு எதிராக, கர்நாடகத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
விவசாயிகள் சங்கம் விடுத்திருக்கும் அழைப்புக்கு மாநிலத்தில் உள்ள 175க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்புப் போராட்டத்துக்கு மாநில அரசும் முழு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநில முதல்வர் சித்தராமையாவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த முழு அடைப்புக்கு கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகமும், தொழிலாளர் கழகமும் ஆதரவு தெரிவித்திருப்பதால், போக்குவரத்து சேவை நாளை முடங்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கழகமும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் நாளை கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து வருமாறு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
முழு அடைப்புப் போராட்டத்துக்கு வணிக அமைப்புகளும், உணவகங்களும் கூட ஒத்துழைப்பு அளித்திருப்பதால் அவைகளும் மூடப்பட்டிருக்கும் என்றே கருதப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல இயங்கும் என்று கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படாது. மருத்துவமனைகளும் மருந்தகங்களும் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி 5 ஆயிரம் கனஅடி நீரை 15 தினங்களுக்கு திறந்து விட கா்நாடகத்திற்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து தமிழகத்திற்கு தண்ணீா் வந்தது.
மீண்டும் கடந்த செப்டம்பா் 12 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட உத்தரவு பிறப்பித்தது. இதை ஆணையமும் ஏற்றுக் கொண்டு இதற்கான உத்தரவை மீண்டும் பிறப்பித்தது. ஆனால், காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. இந்த நிலையில், நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.