முள்ளிவாய்க்காலில் புலிகளின் தங்கம் தேடும் வேட்டை நிறைவு!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் தங்கம், ஆயுதங்களைத் தேடி கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் நேற்று மாலையுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.
முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்று புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அந்தப் பகுதியில் அகழ்வுப் பணிகள் கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், மூன்றாவது நாளாக நேற்றும் கனரக இயந்திரத்தின் மூலம் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
தொல்பொருள் திணைக்களத்தினர், பிரதேச செயலகத்தினர், கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மூன்று நாள் அகழ்வுப் பணிகளின்போது அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதி 13 அடி ஆளமும் 17 மீற்றர் நீளமும் தோண்டி அகழப்பட்டதுடன் அந்தப் பகுதியில் நின்ற மரங்கள், 15 இற்கும் மேற்பட்ட பனைகள், வடலிகள் முற்றாக அகற்றப்பட்டன.
நேற்று மாலை 5.45 மணி வரை அகழ்வுப் பணிகள் நீடித்த நிலையில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை. இதையடுத்து அந்தப் பகுதியை மூடுமாறு நீதிவான் பணித்தார். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதி மூடப்பட்டது.