26 வயது இளைஞர் அடித்து கொலை..டெல்லியில் பரபரப்பு !

கடந்த செவ்வாய்க் கிழமை இரவு சுமார் 10.45 மணியளவில் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு காவல் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, தனது மகனை சிலர் அடித்தே கொன்றுவிட்டதாக கூறியிருக்கிறார். தான் அன்று மாலை 6 மணியளவில் சுந்தர் நகரி பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்ற போது, உடல் முழுவதும் காயங்களுடன் தனது மகன் அங்கு கிடந்ததை பார்த்ததாகவும், வலியால் துடித்துக் கொண்டிருந்த தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது மகன் இறப்பதற்கு முன்பாக தான் திருடிவிட்டதாக குற்றம் சாட்டி சிலர் தன்னை கம்பத்தில் கட்டி வைத்து குச்சி மற்றும் இரும்புக் கம்பியால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாக்கியதாக கூறியதாக சொல்லியிருக்கிறார். இந்நிலையில் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இசார் என்ற 26 வயது இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கும்பல் அந்தக் கொடூரத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கமல், கமலின் சகோதரர் மனோஜ், யூனூஸ், கிசான், பப்பு, மற்றும் லக்கி என ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 17 வயது சிறுவன் தலைமறைவாக உள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், இசார் அந்தப் பகுதியில் அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றித்திரிந்ததாகவும், அவரை விசாரித்த போது அவர் கையில் கத்தி வைத்திருந்ததால் பாதுகாப்பிற்காக அவரை கட்டி வைத்ததாகவும் கூறியிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க உயிரிழந்த இசார் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி பந்தலில் இருந்து வாழைப்பம் ஒன்றை இசார் எடுத்ததாகவும், ஆனால் அவர் பந்தலில் இருந்து பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார் என்கின்றனர் அக்கம்பக்கத்தினர்.
உயிரிழந்தவரும், தாக்கியவர்களும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் நோக்கில் துணை ராணுவப் படை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் டெல்லி வடகிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ஜாய் டிர்கே. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். திருட்டு குற்றம் சாட்டப்பட்டு இஞைர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்தேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.