யாழில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்! – காயங்களுடன் உயிர் தப்பிய ஓட்டோ சாரதி. (Photos)

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள யாழ். மாநகர சபையின் சிறுவர் பூங்காவில் பாரிய பல மரங்கள் காணப்படுகின்றன.
இந்தப் பூங்காவுக்குள் இருக்கின்ற மரங்களின் கீழ், வீதியால் செல்கின்ற பொதுமக்களும் வாகனங்களுடன் அந்த வாகனங்களின் சாரதிகள் பலரும் நிழலுக்காகத் தங்கி நிற்பதும் தரித்து நிற்பதும் வழமையாகும்.
இந்தநிலையில் இன்றும் குறித்த மரத்தின் கீழ் நிழலுகாக ஓட்டோவில் அதன் சாரதியும் தங்கி நின்றிருந்தார்.
அப்போது அடித்த பலமான காற்றால் நீண்ட கால பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
அங்கு நின்றிருந்த ஓட்டோவின் மேல் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஓட்டோ முழுவதும் சேதமடைந்ததுடன் அதன் சாரதி காயங்களுடன் தப்பியுள்ளார்.