பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்க தீர்ப்பு (வயது வந்தவர்களுக்கு மட்டும்)
(வயது வந்தவர்களுக்கு மட்டும்)
அவுஸ்திரேலியாவில் கற்பழிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடுமையான பிணை நிபந்தனைகளுடன் பிணையில் இருந்த தனுஷ்க (32) குணதிலக்கவை அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவித்து விடுதலைசெய்யுமாறு சிட்னி நீதிமன்ற பெண் நீதிபதியான சாரா ஹகெட் நேற்று (28) உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் நடந்த விவாதமே இங்கு பதவிடப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் கற்பழிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடுமையான பிணை நிபந்தனைகளுடன் பிணையில் இருந்த தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவித்து விடுதலைசெய்யுமாறு நியூ சவுத் வெல்ஸ் நீதிமன்ற பெண் நீதிபதியான சாரா ஹகெட் நேற்று (28) உத்தரவிட்டார்.
நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, உடலுறவின்போது ஆணுறையை அகற்ற தனுஷ்க குணதிலக்கவுக்கு வாய்ப்பொன்று இருக்கவில்லை என்றும், மேலும் அவர் காவல் துறையினரது விசாரணையின் போது கூறியவை அனைத்தும் உண்மை எனவும், அதன்படி, தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமை குற்றவாளி அல்ல எனவும் சிட்னி பெண் நீதிபதி நேற்று தனது தீர்ப்பை வழங்கினார்
நவம்பர் 2, 2022 அன்று டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் நீதிபதி சாரா ஹகெட் முன், 29 வயதுடைய ஒரு பெண்ணின் அனுமதியின்றி, கிழக்குப் புறநகர் இல்லத்தில் வைத்து பலாத்காரமாக உடலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக என்ற இலங்கை கிரிகெட் வீரர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதியின்அறிக்கைகடந்த வியாழக்கிழமை தனது தீர்ப்பை அறிவித்த நீதிபதி கூறியதாவது,
“உடலுறவு தொடர்ச்சியாக இடம் பெறும் போது , குற்றம் சாட்டப்பட்டவருக்கு , ஆணுறையை (கொண்டத்தை) அகற்ற வாய்ப்பு இல்லை என்பதை வழக்கின் ஆதாரங்கள் நிறுவுகின்றன. ”
முறைப்பாட்டாளரான யுவதி, , அக்டோபர் 29 அன்று டிண்டர் மூலம் டெனி என அழைக்கப்படும் தனுஷ்க குணதிலகாவை சந்தித்ததோடு, சம்பந்தப்பட்ட பெண் வீடியோ அழைப்புகள் உட்பட இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அவருடன் பேசியுள்ளார்.
அவர்கள் இருவரும் ஓபேரா பாரில் சந்தித்ததோடு, பின்னர் பிரான்கீஸ் பீட்சாவில் இரவு உணவை எடுத்துக் கொண்டதன் பின்னர் , முறைப்பாட்டாளரான யுவதியின் வீட்டிற்கு படகொன்றில் பயணித்துள்ளனர். படகில் பயணிக்கும் போது , யுவதி கிட்டார் வாசிப்பதையும் , பாடுவதையும் குணதிலக வீடியோ செய்துள்ளார்.
“அந்த வீடியோவை அவதானித்த நீதிபதி , வசீகரமான மனநிலையையும் , மகிழ்ச்சியையும் , விளையாட்டுத்தனத்தையும் காண முடிகிறது என தெரிவித்தார்.
முறைப்பாட்டாளரான யுவதி , “தவறான சாட்சியங்களை வழங்க வேண்டுமென்றே விருப்பம் கொண்டிருக்காது போனாலும் , “குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதகமான சூழ்நிலையை சித்தரிக்க அவர்தூண்டப்பட்டதாக அவர் உணர்ந்த நேரங்களை காண முடிந்ததாக நீதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
இரு தினங்களாக சாட்சியமளித்த யுவதி, குணதிலக , தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாகவும், தனது வீட்டிற்கு செல்லும் படகில் வைத்து தனது பிட்டத்தில் தட்டியதாகவும், ஓய்வறைக்கு பின்னால் அவரை தள்ளி விட்டு , மறைந்து இருந்தார் எனவும் குற்றம்சாட்டினார். ஆனால் குறுக்கு விசாரணையில், “என் அறைக்கு போகலாம்” என அவள் முன்னர் கூறியதை நீதிபதி அவ்விடத்தில் சுட்டிக்காட்டினார்.
தனதுபடுக்கையறையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரையிலான கட்டாய உடலுறவின் போது குணதிலக தன்னை குறைந்தது மூன்று முறை மூச்சுத் திணறடிக்குமளவு, பிட்டத்தில் அடித்ததாக புகாரளித்த யுவதி கூறினார்.
உடலுறவு கொண்டதன் பின் மூன்று முதல் ஐந்து நிடங்களுக்கு பின் தனது படுக்கையறையின் தரையில் ஒரு ஆணுறை இருப்பதைக் தான் கவனித்ததாகவும் , குணதிலக தன்னுடன் ஆணைறை இல்லாமல் உடலுறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டிய பெண் , அதை அவர் கழட்டி எறிந்ததை தான் பார்க்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.
ஓபேரா உணவகத்திலிருந்து இருவரும் ஒன்றாக வெளியேறும் சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
சட்டத்தரணிகளது வாதமும் – பிரதிவாதமும்
வழக்கை தொடுத்த யுவதி சார்பாக வாதாடிய சட்டத்தரணி கேப்ரியல் ஸ்டீட்மேன், பாலியல் துன்புறுத்தலாக நடந்த நிகழ்வுகளை தனது வாதத்தில் முன்வைத்து, குணதிலக்கவின் நடத்தை அந்த யுவதி எதிர்பார்த்த அல்லது விரும்பியதில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றார். “அவரது தெளிவான ஆட்சேபனை இருந்தபோதிலும், அவர் , அவரது ஆணுறை அகற்றியுள்ளார் என்றும், அது அவளது விருப்பத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் வழக்கறிஞர் வாதாடினார்.
உடலுறவின் போது ஆணுறையை அகற்ற குணதிலகாவுக்கு நேரம் இல்லை , அந்த பெண்ணே “தொடர்ச்சியான பாலியல் செயல்பாட்டில் இருந்தார்” என விவரித்ததாக தனுஷ்க குணதிலகாவுக்காக வாதாடிய சட்டத்தரணி முருகன் தங்கராஜ் அச் சமயம் சுட்டிக் காட்டினார்.
“இது இத்தோடு முடியவேண்டும். கிரவுண் கோர்ட் இந்த வழக்கை இதற்கு மேல் தேவையான ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாது,” என்று சட்டத்தரணி தங்கராஜ் மேலும் தெரிவித்தார் .
நவம்பர் 6 ஆம் திகதி அதிகாலை இலங்கை அணி விமான நிலையத்திற்குச் செல்லும் போது, ஹயாட் ரீஜென்சி ஹோட்டலில் வைத்து தனுஷ்க குணதிலக கைது செய்யப்பட்டார்.
அவர் தனது ஹோட்டல் அறையை சோதனை செய்ய போலீசாரை அனுமதித்த போது , இரண்டு சுற்றப்பட்ட ஆணுறைகள் அடங்கிய பர்பெர்ரி சாட்செல் பையை போலீசார் கண்டுபிடித்தனர்.
“தேவையின் போது பயன்படுத்துவதற்காக பயன்படுத்தப்படாத இரண்டு ஆணுறைகளை அவர் வைத்திருந்தார்” என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனுஷ்கவின் சாட்சியம்
தனுஷ்க இரண்டரை மணி நேரம் வரை போலீசாரது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். “எந்த நேரத்திலாவது ஆணுறை இல்லாமல் அவளோடு உடலுறவு கொள்ள முயன்றீர்களா?” என போலீசார் கேட்டுள்ளனர்.
“இல்லை, இல்லை, இல்லை,” என தனுஷ்க குணதிலக பதிலளித்துள்ளார்.
ஆனாலும் தனுஷ்க , சாட்சியமளிக்கும் போது , தான் ஆணுறையுடன் உடலுறவு கொள்ள விரும்பவில்லை எனக் கூறியதாக அந்த பெண் கூறிய போதிலும் , ஆணுறை பக்கெட்டை வெளியே எடுத்தது அவளே எனவும் தனுஷ்க தெரிவித்தார்.
“ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை, நாங்கள் ஆணுறைகளுடன் உடலுறவு கொண்டோம்,” என்று தனுஷ்க குணதிலக மேலும் கூறினார்.
“விசாரணைகளின் போதும் அவரிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் குணதிலக பதிலளித்தார், மேலும் அவர் உண்மையாக இருப்பதற்கும் காவல்துறைக்கு உதவுவதற்கும் தன்னால் முடிந்ததைச் செய்கிறார் என்ற தெளிவான எண்ணம் தனக்கு கிடைத்தது” என பெண் நீதிபதியான சாரா ஹகெட் தெரிவித்தார்.
” தனுஷ்க விசாரணைகளின் போது கூறியவற்றை , மறுக்கவோ அல்லது நம்பாதிருக்கவோ எந்த காரணமும் தனக்கு இல்லை” என நீதிபதி மேலும் தெரிவித்தார்.
தனுஷ்க “மிருகமாக மாறிவிட்டார்” என்றும் “நிஜமாகவே பயங்கரமான ஒரு சம்பவம் நடந்தது” என்றும் நண்பர்களிடம் கூறி அந்த பெண் அழுத கதையை நீதிமன்றம் கேட்டது. ஆணுறை குறித்து, அவர் அவர்களிடம், “அவர் அதை கழற்றினாரா என்று எனக்குத் தெரியவில்லை” என்றும் “எனக்கு அது பற்றி உறுதியாக தெரியவில்லை… , எனக்கு அப்படி ஒரு உணர்வு இருக்கிறது” என்றும் முன்னர் கூறியிருந்தார்.
“எனது கருத்துப்படி, புகார் அளித்துள்ள யுவதியினது சாட்சியங்கள் வழக்கை பலப்படுத்துவதற்கு பதிலாக அதை பலவீனப்படுத்துகின்றன.” என்றார் நீதிபதி.
தனுஷ்க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கராஜ், அந்த பெண் நம்பகத் தன்மையின்மைக்கு ஒர் உதாரணம் என்றார்.
துறைமுகத்தில் உள்ள சிசிடிவியில் ஜோடியான இருவரும் முத்தமிடுவதையும் கட்டிப்பிடிப்பதையும் காண முடிந்ததோடு , இது அவரது வாடிக்கையாளர் வலுக்கட்டாயமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்ததாக அவரது கதையுடன் பொருந்தவில்லை என்றும் வழக்கறிஞர் தங்கராஜ் சுட்டிக்காட்டினார்.
தனிஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு கிரிக்கெட் குழுவில் இருந்து தடை விதிக்கப்பட்டது. அவர் 2015 இல் சர்வதேச அரங்குக்கு அறிமுகமானதோடு , 8 டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அவர் T20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றார், ஆனால் ஒரு போட்டியில் விளையாடிய பின்னர் ஏற்பட்ட , கால் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.
வழக்கு விசாரணைக்கு முன்னதாகவே இந்த விவகாரத்தில் ஊடகங்களின் ஆர்வம் காரணமாக, வழக்கு தனி நீதிபதி விசாரணையாக நடந்தது.