பெங்களூருவில் அமலாக உள்ளது போக்குவரத்து நெரிசல் வரி…!
இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூருக்கு முக்கிய இடம் உண்டு. பெங்களூரு நகர சாலைகளில் தினமும் 12 மில்லியன் வாகனங்கள் செல்கின்றனவாம். அப்படி என்றால் போக்குவரத்து நெரிசல் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். பெங்களூரு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அந்நகர மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 60 கோடி மணி நேரங்களை வீணடிக்கிறார்களாம். அதோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்திருப்பதால் ஒரு மணி நேரத்தில் சுமார் 2.8 லட்சம் லிட்டர் எரிபொருள் வீணடிக்கப்படுகிறதாம்.
இந்நிலையில், பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கர்நாடகா அரசு ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதாவது, பெங்களூரு நகருக்குள் நுழையும் வகையில் அமைந்துள்ள 9 சாலைகள் வழியாக பீக் ஹவர்களில் நுழையும் வாகனங்களுக்கு Congestion Tax விதிக்கவுள்ளனர்.
அதாவது போக்குவரத்து நெரிசல் வரி என்ற புதிய விஷயத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பெங்களூருவில் பழைய விமான நிலைய சாலை, ஓல்ட் மெட்ராஸ் சாலை, வெளிவட்டச் சாலை, சர்ஜாபூர் சாலை, பல்லாரி சாலை, ஓசூர் சாலை, பன்னர்கட்டா சாலை, கனகபுரா சாலை, துமகுரு சாலை, மாகடி சாலை மற்றும் வெஸ்ட் ஆஃப் சோர்ட் சாலை உள்ளிட்ட சாலைகளில் இந்த புதிய வரி வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் இந்த புதிய வரி வசூல் முறையை செயல்படுத்த உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் வரியை விதிப்பதன் மூலம் பெங்களூரு நகரின் சாலைகளில் நெரிசல் குறையும், நேர விரயம் குறையும், பயணம் சற்றே விரைவாக இருக்கும். தனி நபர் வாகனங்களை விட்டு விட்டு பொதுப் போக்குவரத்தின் பக்கம் மக்கள் நகருவதற்கு வாய்ப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பீக் ஹவர்களில் பெங்களூரு நகருக்குள் நுழைய விரும்பும் வாகன ஓட்டிகள், வரி செலுத்த வேண்டுமே என்ற விஷயத்தை யோசித்து பார்ப்பர். இதனால் தங்களது பயணத் திட்டத்தை வேறொரு நேரத்திற்கு மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டாகும்.
வாகன நெரிசல் வரியை தற்போது வாகனங்களில் பயன்பாட்டில் இருக்கும் பாஸ்டேக் முறையின் மூலம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சிங்கப்பூர், லண்டன், ஸ்டாக்ஹோம் ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் இந்த திட்டம் வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.