சாதி மறுப்பு திருமணம் செய்த மாற்றுத்திறனாளிகளை ஊருக்குள் அனுமதிக்காத கிராமத்தினர்

இந்திய மாநிலம், கர்நாடகாவில், சாதி மறுப்பு திருமணம் செய்த மாற்றுத்திறனாளிகளை, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊருக்குள் அனுமதிக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், தேவரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளி சாவித்திரி (22). இவர், பெங்களூருவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
அதே தொழிற்சாலையில், ஆந்திராவை சேர்ந்த மணிகண்டன் என்ற பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளியும் பணிபுரிந்து வந்தார்.
இவர்கள், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், இவர்கள் காதலித்ததால், தங்களுடைய பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர்.
ஆனால், இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களூருவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், சாவித்திரியின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் அவர்களை தங்களுடைய கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கு, அங்குள்ள கிராம மக்கள், வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஊருக்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அபராதமாக ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
இதனால், மாற்றுத்திறனாளி தம்பதியினர் சித்ரதுர்கா தாலுகா அலுவலகத்திற்கு சென்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர். இந்த மனுவை வாங்கிக் கொண்ட தாசில்தார்,நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்நிலையில், தம்பதியினர் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளனர். இந்த விவகாரம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.