நாடாளுமன்றத்தில் தனி வழி! ஐனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர்!! – டி.ரி.என்.ஏ. தீர்மானம்.
நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது.
ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தில் நேற்று (28) மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ்த் தேசியக் கட்சி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் செயற்பட்டு வந்திருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது பிரிந்து நின்றனர்.
தமிழரசுக் கட்சி தனி அணியாகவும், ஏனைய கட்சிகள் வேறு பலரையும் இணைத்துக் கொண்டு புதியதொரு கூட்டமைப்பையும் (ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) உருவாக்கியிருந்தனர்.
ஆனாலும் நாடாளுமன்றத்தில் இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்த நிலையில் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட முடியாது என்பதால் பிறிதொரு அணியாகச் செயற்பட அவர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.
இதற்கமைய அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது தனி அணியாகச் செயற்படப் போவதாகச் சபாநாயகருக்கு அறிவித்தலை வழங்கிவிட்டு இனிமேல் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றில்லாமல் தனியான அணியாகச் செயற்படுவது என அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
அதேபோன்று எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலின்போது தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளரை இறக்குவது எனவும், இதற்கமைய தமிழர் தரப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவது எனவும் தீர்மானித்துள்ளனர்
மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஏனைய தரப்பினருடன் இணைந்து சந்திப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
இவ்வாறு சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைவருமாக இணைந்து ஆராய்ந்து சில தீர்மானங்களை எடுத்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.