அதிகாரத்தை துறந்து நாட்டை விட்டு முல்லை நீதிபதி ஓடியது ஏன்?
உயிருக்கு அச்சுறுத்தல், அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக மாவட்ட நீதிபதி, நீதவான், குடும்ப நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட 6 நியமனங்களை வகித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி. சரவணராஜா , அத்தனை பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு கனடாவுக்கு சென்றுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி கொக்குதொடுவாய் பகுதி வீதி அகழ்வில் காணப்பட்ட பாரிய மனித புதை குழி தொடர்பாகவும் நீதிபதி சரவணராஜா விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
குருந்தூர் மலை தொல்லியல் நினைவுச் சின்னம் பிரச்சனை ……
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்குமாறு அவர் வழங்கிய கட்டளையே அவரது மரண அச்சுறுத்தல்களுக்கு முக்கிய காரணமாகும்.
குருந்தூர்மலை தொல்லியல் நினைவுச் சின்னங்கள் இது ஒரு பௌத்த ஆலயத்தின் இடிபாடுகள் என பௌத்தர்களும், இந்துக் கோவிலின் இடிபாடுகள் என இந்துக்களும் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள இடிபாடுகளை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். (கூகள் அளவீட்டின் படி 226 ஏக்கர்)
தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் காணப்படும் இடங்களில் மற்றவர்களுக்கு கட்டுமானம் அல்லது அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி இல்லை. இதுபோன்ற இடங்களை தொல்லியல் துறையினர் முறையாக அகழ்வாராய்ச்சி செய்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். ஆனால் தொல்பொருள் திணைக்களம் சட்டத்தை மீறி பௌத்த கட்டிடங்களை கட்ட அனுமதித்துள்ளது. தொல்லியல் துறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் இறுதியாக தொல்பொருள் வலயத்தைப் பாதுகாப்பதற்காக இராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஜனாதிபதி ரணிலின் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களே இதற்குக் காரணம்.
பின்னர் அந்த பதவிக்கு வந்த பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிபதி சரவணராஜா , இங்கு விதிமீறல் கட்டுமானங்களை தடுக்குமாறு 3 உத்தரவுகளை பிறப்பித்தும், அந்த உத்தரவுகளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை.
மோதலை உருவாக்கிய சரத் வீரசேகர…
பொஹொட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குருந்தூர்மலை தொல்பொருள் நினைவுத் தூபிக்கு விஜயம் செய்த போது அங்கே கலந்து கொள்ள நீதிபதி சரவணராஜா அவருக்கு அனுமதிக்கவில்லை. இதில் எந்த அரசியல்வாதியும் கலந்து கொள்வது தேவையற்றது என்று நீதிபதி கூறினார்.
பின்னர் 2023 ஆகஸ்ட் 22ஆம் திகதி சரத் வீரசேகர, மற்றுமொரு பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது , அவரது சிறப்புரிமைகள் என்ற போர்வையில் நீதிபதி சரவணராஜாவை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்.
“இது சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி அறிந்து கொள்ள வேண்டும். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்” என சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார்.
அதை வாபஸ் பெறுமாறு சபாநாயகரோ அல்லது அங்கிருந்த எவருமோ கூறவில்லை.
சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு…
சரத் வீரசேகரவின் இந்த கருத்துக்கு நீதித்துறையின் சுதந்திரத்துக்காக செயற்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு (ICJ) ஆகியவை அவற்றில் பிரதானமானவையாகும்.
ஆனால் நடந்ததோ வேறு……
ஆனால் நடந்தது என்னவெனில் நீதிபதி சரவணராஜாவுக்கு வேண்டிய பாதுகாப்பு வழங்கப்படாமல், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் குறைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் செப்டம்பர் 21ம் திகதி , நீதிபதி சரவணராஜாவை அழைத்து குருந்தூர்மலை தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப் பெறுமாறு அழுத்தம் கொடுத்தார் என நீதிபதி சரவணராஜா செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் உள்ளன.
‘இவர்கள் ஒரு சிலரே..’ – நீதிபதி சரவணராஜா
“குருந்தூர்மலை வழக்கில் நான் பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. சரத் வீரசேகர போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். புலனாய்வு அதிகாரிகள் என்னை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். , எனக்கு (நீதிபதி) கொடுக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்புகள் சமீபத்தில் குறைக்கப்பட்டது.”
” சட்டமா அதிபர் என்னை (நீதிபதியை) 21.09.2023 அன்று தனது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு அழைத்தார். அப்போது குருந்தூர்மலை வழக்கில் நான் பிறப்பித்த உத்தரவுகளைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார்.”
“இதுமட்டுமின்றி, குருந்தூர்மலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன.”
“ஆணை பிறப்பிக்கப்பட்டதில் இருந்து எனது உயிருக்கு அச்சுறுத்தல், அழுத்தம் மற்றும் துன்புறுத்தல் காரணமாக எனது அன்புக்குரிய நீதித்துறை பதவிகளில் இருந்து நான் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மேலே கூறப்பட்டவை நான் பெற்ற அச்சுறுத்தல்கள், அழுத்தம் மற்றும் துன்புறுத்தலின் சில மட்டுமே என தெரிவித்துள்ளார்.
“நான் அப்படிச் சொல்லவில்லை…” – என சட்டமா அதிபர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரவணராஜா மீது தான் செல்வாக்கு செலுத்தியதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. அது தொடர்பில் இன்னும் சில தினங்களில் தான் ஒரு அறிக்கை வெளியிடவுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார் என புதிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.