கரையான் சாப்பிட்ட 18 லட்சம் பணம்.. வங்கி லாக்கரில் நடத்த சம்பவம்..!!
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக வங்கி லாக்கரில் சேமித்து வைத்திருந்த 18 லட்சம் பணத்தை கரையான்களால் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொராதாபாத்தைச் சேர்ந்த அல்கா பதக் கடந்த ஆண்டு அக்டோபரில், பாங்க் ஆப் பரோடாவின் ஆஷியானா கிளையில் தனது லாக்கரில் 18 லட்சம் மதிப்பிலான பணத்தை பத்திரமாக வைத்துள்ளார். வங்கி ஊழியர்கள் சமீபத்தில் அவரைத் தொடர்பு கொண்டு, லாக்கர் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக வங்கிக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்காக வங்கிக்குச் சென்ற பதக், தனது லாக்கரை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது தன் மகளின் திருமணத்திற்காக கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த கரன்சி நோட்டுகள் கரையான்களால் கடித்து துகள் துகளாக மாறியிருந்தது. இந்த சம்பவத்தால் வங்கி அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விஷயம் வைரலாகி பரவியது. இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்ட போது, இந்த விவகாரம் தொடர்பாக பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைமை அலுவலக நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்கப்ட்டுள்ளதாக கூறியுள்ளனர்.ஆனால் இந்த விவகாரம் குறித்து வங்கி அதிகாரிகள் தனக்கு இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
எனக்கு வங்கியில் இருந்து உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் ஊடகங்கள் தனக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பதக். ஆனால் அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, வங்கி லாக்கர்களில் பணத்தை சேமித்து வைக்கக் கூடாது, அதன்படி பேங்க் ஆஃப் பரோடா லாக்கர் ஒப்பந்தமும் லாக்கர்கள் பயன்படுத்துவது என்பது நகைகள் மற்றும் ஆவணங்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை சேமித்து வைப்பது போன்ற சட்டப்பூர்வமான நோக்கங்களுக்காக மட்டுமே, ஆனால் பணம் அல்லது நாணயத்தை சேமிப்பதற்காக அல்ல என்றும் குறிப்பிடுகிறது.
திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் லாக்கரில் இருக்கும் பொருட்களை இழக்க நேர்ந்தால் அதற்கு வங்கியே பொறுப்பு என்று வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் தீ விபத்து, கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்களின் போது இழப்பு ஏற்பட்டாமல் வாடிக்கையாளருக்கு 100 சதவீத இழப்பீடு கிடைக்கும். பணத்தை லாக்கரில் வைப்பது விதிகளுக்கு முரணானது என்பதால் இந்த விவகாரத்தை வங்கி எப்படி அனுகப் போகிறது என்பது தெரியவில்லை. தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 18 லட்சம் ரூபாயை இழந்து வேதனையில் இருக்கிறார் அல்கா பதக்.