காவிரி விவகாரம் “தண்ணீர் தந்தால் மட்டுமே I.N.D.I.A.-ல்” ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை
காவிரி நதிநீர் பிரச்சனை பெரிதாகி வரும் நிலையில், இது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் ஆட்சியின் பெருமையை பறைசாற்றும் விதமாக காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி முன்யோசனையின்றி தண்ணீரை திறந்துவிட்டார் முக ஸ்டாலின் என குற்றம்சாட்டி, திமுக அரசின் பேச்சை நம்பி காவிரி டெல்டா பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்கு சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தங்கள் கையில் இருந்த பணம், நகை, விதை, நெல், வங்கி கடன் மற்றும் உடல் உழைப்பையும் மூலதனமாக்கி, 5 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடிகளை துவங்கினர். ஆனால், போதிய தண்ணீரின்றி 3.50 லட்ச ஏக்கர் நெற்பயிர் கருகியது என குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக திறனற்ற இந்த அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஜூன் மாதம் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்தவுடன், மேட்டூர் அணையில் நமது கைவசம் இருக்கக்கூடிய தண்ணீர் முழுவதையும் திறந்துவிடுவதை குறைத்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களுக்கான பங்கு நீரை சட்டப்படியும் அரசியல் அழுத்தத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேட்டூர் அணையில் நீரையெல்லாம் காலி செய்தபின், தற்போது மத்திய அரசை காரணம் காட்டி காலதாமதம் செய்வதை தவிர, காவிரி நீர் பிரச்சனைக்கு எந்த துரும்பையும் கிளிபோடவில்லை. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் தான் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று நிபந்தனையை வித்திருக்கலாம் என தெரிவித்துள்ள இபிஎஸ் தும்பைவிட்டு வாலை பிடிப்பது போல, மத்திய அரசு பின்னால் ஒளிவது ஏற்புடையதல்ல.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி, தமிழக மக்களின் உரிமையை காத்திட காவிரி நீரை விரைந்து பெற்று தரவேண்டும் என உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.