திருமலையில் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை!
திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திருகோணமலை நீதிமன்றம் 8 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்தத் தடை உத்தரவை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி. அன்பார் வழங்கினார்.
இதையடுத்து இன்றைய ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.
திருகோணமலை – இலுப்பைக்குளம் பொரலுகந்த ரஜமஹா விகாரை நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டாம் எனக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடை விதித்திருந்த போதிலும் குறித்த கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனை நிறுத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.
இதையடுத்து நிலாவெளி பொலிஸார் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் பிரச்சினைகள் உருவாக்கப்படலாம் என நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன், தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ரெலோவின் பொதுச்செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், தமிழ் மக்கள் முன்னணி கட்சியின் இளைஞர் அணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத், திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம் உள்ளிட்ட 8 பேருக்கு இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டது.