நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வீரசேகரவின் செயற்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!
“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சரத் வீரசேகர போன்றோரின் செயற்பாடுகள் பற்றி பூரணமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதிபதிக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.”
இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காரணத்தினாலேயே தமது மதிப்பு வாய்ந்த நீதிபதி பதவியை இராஜிநாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில், நாட்டின் நீதி அமைச்சரோ அவர் தாமாக முன்வந்து சட்டமா அதிபரைச் சந்தித்தார், இரண்டு இராஜதந்திரிகளைச் சந்தித்தார், தமது வாகனத்தை விற்றார் என்று கூறுகின்றார். நீதி அமைச்சர் ஒரு அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி. பதவியை இராஜிநாமாச் செய்த பின் ஒருவர் எதையும் விற்கலாம் யாரையும் சந்திக்கலாம் என்பதை தெரியாதவர் அல்லர்.
குருந்தூர்மலைப் பகுதியில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக விகாரை கட்டுமானம் இடம்பெறுவது பற்றிய தள ஆய்வுக்கவாகவே நீதிமன்ற அலுவலர்கள் சகிதம் நீதிபதி அங்கு சென்றுள்ளார். ஆய்வுப் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எதுவித அறிவித்தலோ, அழைப்போ, அனுமதியோ இல்லாமல் தமது பரிவாரங்களுடன் அங்கு பிரசன்னமாகியது மட்டுமன்றி நீதிபதியின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் அவருடன் வாதிட முயன்றிருக்கிறார். இது நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் செயலாகும்.
அதனை நீதிபதி நிராகரித்த காரணத்தால் சரத் வீரசேகர ஆத்திரப்பட்ட நிலையிலேயே காணப்பட்டார். நீதிமன்றச் செயற்பாடுகளில் வேறு எவரும் தலையீடு செய்வது நீதிமன்ற நடைமுறைகளுக்கு மாறானது என்று தெரிந்து கொண்டே சரத் வீரசேகர இவ்வாறு அடாவடித்தனமாகச் செயற்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற அனுபவம் உள்ளவரும், பாதுகாப்புத் துறைசார் குழுவின் தலைவராக உள்ளவருமான சரத் வீரசேகரவின் அன்றைய செயற்பாடுகளே நீதிபதி சரவணரராஜாவுக்கு தீவிர உயிர் அச்சுறுத்தலைத் தோற்றுவித்தது. இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் இணைந்து இனவாதத்தைக் காட்டியிருந்தார்.
இதற்கு மேலாக, நாடாளுமன்றச் சிறப்புரிமையை கவசமாகப் பாவித்து சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக ஆற்றிய உரை அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவது உறுதிப்படுத்தியிருக்கக்கூடியது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டின்படி செயற்பட்ட நீதிபதியைப் பாதுகாக்க வேண்டிய நீதி அமைச்சரும் சபாநாயகரும் பொருத்தமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. சபாநாயகர் ஒப்புக்கு ஒரு ஆலோசனையைத் தெரிவித்து விடயத்தை முடித்துக்கொண்டார்.
நீதிமன்ற உத்தரவை மீறுி பௌத்த வழிபாட்டு நிலையத்தை குருந்தூர்மலை பிக்கு மேற்கொண்ட நிர்மாண வேலைகள், அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் புத்தசாசன அமைச்சரின் வருகை, நீதிபதியின் தனிப்பட்ட குடும்ப விடயங்களை விமர்சனம் செய்தமை எல்லாமே நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கும் என்பதை உணராதது மட்டுமன்றி, இவற்றையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததன் மூலம் இந்த நாட்டில் நீதி நிர்வாகம் இனவாதத்துக்குள்ளும் பௌத்த மதவாதத்துக்குள்ளும் சிக்கியுள்ளமை வெளிப்படை.
ஒரு நீதிபதியை அந்தப் பதவி சார்ந்து பார்க்காமல் தமிழன் என்று பார்த்து விமர்ச்சித்தையும் இரசித்துக் கொண்டது முழு அரசும். வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம் இது. இந்த இலட்சணத்தில்தான் உள்ளகப் பொறிமுறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும், சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும் சிங்கள ஏகாதியத்தியம் பேசிக்கொண்டிருக்கின்றது.
எனவே, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சரத் வீரசேகர போன்றோரின் செயற்பாடுகள் பற்றி பூரணமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதிபதிக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதேநேரம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கப்பெறும் வகையிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களுக்கு அமைய பன்னாட்டு பங்களிப்புடன் கூடிய விசாரணைகள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இங்குள்ள அனைத்து இராஜதந்திரிகளும் மானுட தர்மத்துடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.